பைக்கில் இருந்து 4 பவுன் நகை திருட்டு
- கேமராவில் பதிவான நபருக்கு வலை வீச்சு
- அடகு வைத்த நகையை மீட்டு வந்தபோது துணிகரம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசன் (வயது 33), டிரைவர். இவர் நேற்று தனக்கு சொந்தமான 3 பவுன் நகையை தெள்ளாரில் உள்ள தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்தார்.
அதில் கிடைத்த ரூ.93 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள மற்றொரு வங்கியில் ஏற்கனவே அடகு வைத்த பவுன் நகையை மீட்டார்.
பின்னர், நகையை தனது பைக்கின் சீட் அடியில் வைத்துக் கொண்டு தெள்ளார் வந்தார். அங்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்த நகைக்கான ரசீது பெற வங்கி முன்பாக பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
அங்கு ரசீது வாங்கிக் வெளியே வந்தார். அப்போது, பைக் சீட்டின் லாக் உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணியரசன் தெள்ளார் போலீசில் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ் பெக்டர் ரேகாமதி, எஸ்ஐ சக்திவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் தொப்பி அணிந்தபடி முகம் தெரியாமல் இருக்க மாஸ்க் அணிந்து கொண்டு பைக்கில் இருந்த நகையை திருடியது தெரிந்தது. நகை திருடி சென்ற நபர் பைக்கில் வந்தவாசி சாலை நோக்கி சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து வந்தவாசி, தேசூர், ஏம்பலம், ஜப்திகாரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.