திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
- புதன்கிழமை காலை தொடங்கி வியாழக்கிழமை காலை நிறைவடைகிறது
- கோவில் நிர்வாகம் அறிவிப்பு
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு தினமும் உள்ளூர், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற 30 -ந் தேதி(புதன்கிழமை) காலை 10.45 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி(வியாழக்கிழமை)காலை 8.19 மணிக்கு நிறைவடைகிறது.
இதனால் புதன்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.