பண்ருட்டியில் இடி விழுந்து வீடு, மின்சாதன பொருட்கள் சேதம்
- வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வர்கள் அலறிஅடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
- விரைந்து சென்று மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தார்.
கடலூர்:
பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழைபெய்தது. இதனால் பண்ருட்டி அடுத்த புலவனூர் கிராமத்தில் முருகன் கோவில் தெருவில் உள்ள ஆனைஅப்பன் என்பவரது வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த வர்கள் அலறிஅடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். இடி விழுந்ததால் வீடு சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மின் சாதனங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. அந்த பகுதியில் இருந்த அனைத்து வீடுகளிலும் டெலிவிஷன், மிக்சி, கிரைண்டர் ஆகியவை இடி தாக்கியதில் சேதம் அடைந்தது. இடி, மழை காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.இது குறித்து வருவாய்த் துறையினர், போலீசார் விசாரணை நடத்தினர்.
இதே போல பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிராமத்தில் தோப்பு தெருவில் தொடர் மழை காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து பஞ்சாயத்து தலைவர் திருமலை ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதே போல பண்ருட்டி கும்பகோணம்சாலையில் கிளை கருவூலம் எதிரில் மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின்சார வயர்கள் மீது மரங்கள் சாய்ந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்பவர் மீது மரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.மின் ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.