- 10 நிமிடத்திற்கும் மேலாக புலி ஒன்று அப்பகுதியில் உலா வந்த வண்ணம் இருந்துள்ளது.
- புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியை ஒட்டிய வனப்பகுதி தமிழ்நாடு கர்நாடகாவை இணைக்கும் ஒரு முக்கிய வனப்பகுதியாக உள்ளது.
இந்த வனப்பகுதியில் அதிகப்படியான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.
காட்டு எருமை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் அடிக்கடி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவது வாடிக்கையான ஒன்று.
ஆனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டும் வாழக்கூடிய புலியின் நடமாட்டம் கோத்தகிரி கோடநாடு வனப்பகுதியில் தற்போது தென்பட்டுள்ளது.
நேற்று மாலை அப்பகுதியில் நிலஅளவை பணிசெய்து கொண்டிருந்த ஊழியர்கள் பணிமுடிந்து வரும் போது சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக புலி ஒன்று அப்பகுதியில் உலா வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனை ஊழியர் ஒருவர் தனது செல்போன் காமிராவில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ அந்த பகுதியில் பரவி வருகிறது. புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.