தாசில்தார் அலுவலகம் முன்பு கைகுழந்தையுடன் 2 பெண்கள் தர்ணா போராட்டம்
- 57 சென்ட் விவசாய நிலம் மற்றும் வீட்டுமனையை சித்தப்பா குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு
- விரைந்து நிலத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கலந்திரா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி- லட்சுமி தம்பதியினர் இவர்களுக்கு சுபாஷ் என்ற மகனும், ரோஸி மற்றும் ரீட்டா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சுபாஷ் திருமணம் முடிந்து சின்ன கல்லுப்பள்ளி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இதே போல் 2 பெண் பிள்ளைகளும் திருமணம் முடிந்து சேலத்தில் அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தாய் லட்சுமி கடந்த 12 வருடத்திற்கு முன்பும், தந்தை ஜோதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் கலந்திரா கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான 57 சென்ட் விவசாய நிலம் மற்றும் வீட்டுமனை உள்ளது. அதனை ரீட்டாவின் சித்தப்பா குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகள் ரீட்டா தங்களுடைய விவசாய நிலம் மற்றும் வீட்டு மனையை அளவீடு செய்து தரக்கோரி ஆன்லைன் மூலம் பதிவு செய்து விட்டு இது வரையில் 8 முறை சேலத்தில் இருந்து வாணியம்பாடி தாசில்தார் ஆபிஸில் உள்ள நில அளவியர் வந்து சென்றுள்ளார்.
வரும் போதெல்லாம் அடுத்த வாரம் என்று சொல்லி அனுப்பி வருவதால் ஆத்திரமடைந்த ரீட்டா மற்றும் அவரது சகோதரி ரோஸி கைகுழந்தையுடன் தாசில்தார் ஆபிஸ் முன் அமர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார் மற்றும் தாசில்தார் சாந்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விரைந்து நிலத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.