உள்ளூர் செய்திகள்

ரேசன் கடையில் மாடு கட்டி வைத்திருக்கும் காட்சி

மாட்டுத் தொழுவமாக மாறிய ரேசன் கடை

Published On 2023-10-10 08:14 GMT   |   Update On 2023-10-10 08:14 GMT
  • சிமெண்ட் பூச்சிகள் விழுவதால் பொதுமக்கள் அச்சம்
  • பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக புகார்

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள சோமலாபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் வசதிக்காக ரேசன் கடை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் அந்த பகுதியை சேர்ந்த 700 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ரேசன் கடை கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து பராமரிப்பின்றி கிடக்கிறது.

அடிக்கடி சுவர் மற்றும் சீலிங்கில் உள்ள சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து கீழே விழுகிறது. பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்லும்போது, அவர்கள் மீது சிமெண்ட் பூச்சிகள் விழுந்து காயம் அடைகின்றனர்.

மேலும் அந்த ரேசன் கடை வளாகம் தற்போது மாட்டுத் தொழுவமாகவும் மாறி உள்ளது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

பல ஆண்டுகளாக பழு தடைந்துள்ள கட்டிடத்தில் சென்று பொருட்கள் வாங்க அச்சமாக உள்ளது. ரேசன் கடை அமைந்துள்ள பகுதியில் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.

ரேசன் கடையை சுற்றியுள்ள புதர்களிலிருந்து பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

ரேஷன் கடை வளாகத்தை சுத்தம் செய்வதோடு, பழுதடைந்த கட்டிடத்தையும் புதுக்க வேண்டும் என பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே அசம்பா விதங்கள் ஏதும் நடக்கும் முன்பு பழுதடைந்த கட்டிடத்தை சீரமைப்ப தோடு, ரேசன் கடையை சுற்றி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News