ரேசன் அரிசி கடத்துவதில் கோஷ்டி மோதல்
- டிரைவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நாட்டறம் பள்ளி, திம்மாம்பேட்டை, அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி டன் கணக்கில் ஆந்திர மாநிலத்திற்கும், கர்நாடக மாநிலத்திற்கும் அரிசி கடத்த பட்டு வருகிறது.
இந்த அரிசி ரெயில்கள் மூலமாகவும், மினிலாரி, மோட்டார் சைக்கிளில் மூலமாக வெளிமாநிலத்திற்கு கடத்தப்பட்டு வந்தது.
தற்போது வாணியம்பாடியில் இருந்து தனியார் மினி பஸ்களில் கடத்தல் அதிகரித்து வந்தது, இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு ரோடு பகுதியில் நேற்று காலை ரேசன் அரிசி மூட்டைகளை தனியார் மினி பஸ்ஸில் ஏற்ற ஒரு பிரிவினர் வந்தனர். அப்போது பஸ்ஸின் டிரைவர் நாகலிங்கம் (வயது 25)என்பவர் அரிசி மூட்டைகளை ஏற்ற முடியாது என மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அரிசி மூட்டை ஏற்ற வந்த குமார் மற்றும் ஆதரவாளர்கள் நாகலிங்கத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர். எங்களுடைய அரிசி மூட்டைகளை மற்றும் ஏன் ஏற்ற மறுக்கிறீர்கள், மற்றவர்கள் மூட்டைகளை மட்டும் எப்படி எடுத்துச் செல்லலாம் எனக்கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த டிரைவர் நாகலிங்கம் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து அம்பலூர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக ஆந்திர எல்லையில் உள்ள வெலிதிகமாணிபெண்டா வழியாக அதிகமாக அரிசி கடத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த மலைக்கு போகும் வழியில் வனத்துறை செக் போஸ்ட் ஒன்றும் , காவல்துறை செக்போஸ்ட் 3 இருந்தும், தொடர்ந்து கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.