பஸ்சில் கடத்திய 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
- வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு தனியார் பஸ்கள் மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் வாணியம்பாடி அருகே அண்ணாநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற தனியார் பஸ்சை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் சுமார் 250 கிலோ ரேசன் அரிசி இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து தும்பேரி பகுதியில் சாலையோரம் பாழடைந்த வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளி மாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த சுமார் 250 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ ரேசன் அரிசியை வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.