- கலெக்டர் ஆய்வு
- உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து தொண்ணையனூர் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டுமான பணியை பார்வையிட்டார். மேலும் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை அமைச்சர் ஏவா வேலு கடந்த 9-ந்தேதி 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
மேலும் புள்ளானேரி ஊராட்சிக்குட்பட்ட தொண்ணையனூர் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார். மேலும் பள்ளி மாணவர்கள் திருக்குறள் மற்றும் வகுப்பின் சுவரில் அமைந்திருந்த சிறு பலகையில் உள்ள தமிழ் சொற்களை படிக்க வைத்தார்.
ஆய்வுகளின்போது உதவி இயக்குநர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, புள்ளானேரி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தணிகாசலம், பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபதி உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.