ஏலகிரி மலையில் பண்ணை குட்டை அமைக்கும் பணி
- டெல்லி குழுவினர் ஆய்வு
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்தவும், வறட்சியை செழிப்பாக்கவும், விவசாயங்களை மேம்படுத்தவும், குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள 204 ஊராட்சிகளில் 1,400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இந்தப் பணி ஆனது தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும்தான் அதிக அளவில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட முழுவதும் பண்ணை குட்டைகள் வெட்டப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து வந்துள்ள குழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாவட்ட முழுவதும் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலையில் ஊராட்சியில் 6 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெற்று வரும் பணியை டெல்லியில் இருந்து வந்த டாக்டர் எஸ்வந்த் சாய் ஆய்வு செய்தார்.
அப்போது பண்ணை குட்டையில் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை அளவீடு செய்தனர். அப்போது பண்ணை குட்டைகள் அமைப்பதால் நிலத்தடி நீர் உயர்வதோடு, குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும், விவசாயம் செழிக்கும், வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இதனால் பண்ணை குட்டை பயனுள்ள ஒன்று என ஆய்வு மேற்கொண்டவர்கள் அங்குள்ள பொது மக்களுக்கு தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆய்வின் போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணை தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார், உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.