உள்ளூர் செய்திகள் (District)

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

Published On 2023-10-21 07:59 GMT   |   Update On 2023-10-21 07:59 GMT
  • பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
  • மின்இணைப்புகளை துண்டித்த பின்பு, கடை மூட வேண்டும்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொழிற்சாலைகள் தீத்த டுப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் அதிகாரிகள், பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

திருப்பத்தூரில் 30 பட்டாசு கடைகள், நாட்றம்பள்ளியில் 15, வாணியம்பாடியில் 16 மற்றும் ஆம்பூரில் 4 என மொத்தம் 65 பட்டாசுகடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு கடைகளில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பட்டாசு கடை உரிமம் வழங்கப்பட்ட கடையில் இதர பொருட்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது.

வெடி பொருட்கள், மத்தாப்பு வகை பட்டாசுகளை குறிப்பிட்ட அளவிற்கு மிகாமல் இருப்பு வைத்து விற்பனை செய்யக்கூடாது. தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கடையின் அருகே பட்டாசு வெடிக்க அனுமதித்தல், சிறுவர்களின் பொறுப்பில் பட்டாசு விற்க அனுமதித்தல் ஆகியவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் பட்டாசு கடைக்குள் அல்லது அருகில் திறந்த விளக்குகள், மெழுகுவர்த்தி, தீக்குச்சி மற்றும் தீப்பொறி ஏற்படுத்தும் மின் சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.

திருமண மண்டபங்களில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது. விற்பனை முடிந்ததும் கடையை மூடும் முன் மின்இணைப்புகளை துண்டித்த பின்பு, கடை மூட வேண்டும். விழிப்புணர்வு விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பொது மக்களின் உயிர் அச்சுருத்தல் இன்றி கடைகள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News