கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தகுதி நீக்கம்
- முறைகேடு நடந்துள்ளதாக புகார்
- அதிகாரிகள் நடவடிக்கை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இது துணைப் பதிவாளர் (பால்வளம்) வேலூர் சரக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தலைவர் கோபு, துணைத் தலைவர் கார்த்தி, மன்னன், கணபத கணபதி, காயத்ரி, ரேணுகா, மீனா, ரங்கசாமி, ஆறுமுகம், வரதராஜி, சின்னப்பிள்ளை ஆகிய 9 பேர் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் சங்க நிர்வாகிகள் சங்கத்திற்கு முரண்பாடாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், சங்கத் துணை விதிக்கு முரணாக சங்க நிர்வாக குழு செயல்பட்டு மேற்படி முறைகேடுகளுக்கு காரணமான சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் வேலூர் துணைப் பதிவாளர்களுக்கு (பால்வளம்) அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
வேலூர் துணைப்பதிவாளர் தலைவர் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டு விசாரணை மேற்கொண்டார்.
அப்போது சங்கத் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சங்கத்தில் கடமை மற்றும் பொறுப்புகள் சரிவர தெரியாததால் மேற்படி நிதி இழப்பு ஏற்பட நாங்கள் காரணமாகி விட்டதாக தாங்களே ஒப்புக்கொண்டனர்.
இதனை அடுத்து தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக சங்கத்திற்கு நிதியிழப்பு ஏற்படுத்தி கடமை மற்றும் பொறுப்புகளை முறையாக செய்ய தவறியதால் சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழு 9 உறுப்பினர்கள் உள்பட அனைவரையும் நிரந்தர தகுதி நீக்கம் செய்து கூடுதல் பால் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஜெ. ராஜராஜன் உத்தரவிட்டார்.
இதனால் காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 9 நிர்வாகிகள் நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.