15 ஆண்டுகள் பயன்படுத்தாத மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை
- கலெக்டர் நடவடிக்கை
- குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த சுண்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் வழங்குவது தொடர்பாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு கடந்த 15 ஆண்டு காலமாக தண்ணீர் ஏற்றாத நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கலெக்டர் தண்ணீர் குழாய்களை இணைத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டது. பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.
அதன் பிறகு பொது மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி பாறையூர் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.8.57 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 94 குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 720 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.
மேலும் பச்சூர் ஊராட்சி சுண்டம்பட்டியில் ரூ.8.97 லட்சம் மதிப்பீட்டில் 94 குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணியின் மூலமாக சுமார் 860 நபர்களுக்கள் பயனடைய உள்ளனர்.
ஆய்வின் போது உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.