கோடை உழவு செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும்
- வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்
- மழைநீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறங்கி மழைநீரை சேமிக்க கோடை உழவு உதவுகிறது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாவட்டத்தில் தற்போது கோடை மழை பரவலாகபெய்ய ஆரம்பித்துள்ளது. கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை உழவு செய்வதால் பல நன்மை கிடைக்கும்.
கோடை காலங் களில் சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் கோடை உழவு செய்வதன் மூலம் மேல் மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால், மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணில் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிப்பதோடு, மழைநீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறங்கி மழைநீரை சேமிக்க கோடை உழவு உதவு கிறது.
மேலும், பயிரின் வேர் நன்கு ஆழமாக செல்ல இது வழி செய்கிறது.
மண்ணில் உள்ள நோய் கிருமிகளும் பூச்சிகளின் முட்டைகள் கூட்டுப்புழுக்களும் நிலத்தில் உள்ள களைச்செ டிகளின் விதைகளும் வெளியே தள்ளப்பட்டு வெயிலின் வெம்மையால் அழிக்கப்பட்டு வரும் பருவத்தில் பூச்சி, நோய் தாக்குதலை குறைக்க உதவுகிறது. கோடை உழவு உழும்போது பயிரின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மண்ணிலிருந்து பயிருக்கு எளிதில் கிடைக்க உதவுகிறது. இது தவிர மண் அரிமானத்தைக் கட்டுப்படுத்தி மண்ணிலுள்ள பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் விரயமாவதை தடுக்கிறது.
எனவே, திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் கோடை உழவை செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.