கிராம சபை கூட்டத்தில் மதுப்பிரியர் அலப்பறை
- ஆட்சியர் நீ சரியாகதான் பேசினாய் என்று பதில் அளித்தார்
- போலீசார் அங்கிருந்து அழைத்து சென்று வெளியே விட்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் கிரிசமுத்திரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் குறைகளைக் கேட்டனர்.
அப்போது அங்கு மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் கலெக்டரை பார்த்து இங்கு நடைபெறும் பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நான் தவறாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் மன்னிப்பு கேட்டு அலப்பறை செய்தார்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் நீ சரியாகதான் பேசினாய் என்று பதில் அளித்தார். பின்னர் எழுந்து நின்ற மாவட்ட ஆட்சியரிடம் கையை பிடிக்க சென்ற அந்த மது போதை வாலிபரை போலீசார் அங்கிருந்து அழைத்து சென்று வெளியே விட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.