- ரூ.20 லட்சத்தில் மகன்கள் கட்டினர்
- 1000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 70).
இவரது மனைவி இந்திராணி இவர்களுக்கு 3 மகன்கள் 2 மகழ்கள் உள்ளனர். நீலகண்டன் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக நாட்டு மருத்துவம் பார்த்து வந்தார்.
பெண் கல்வியை ஊக்குவித்து பல பெண்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து அப்பகுதி மக்களிடையே பேரன்பை பெற்றிருந்தார்.
மேலும் தனது 3 மகன்களான ரமேஷ், ராஜேந்திரன், மகேந்திரன் ஆகியோரை நல்ல முறையில் படிக்க வைத்து இன்று வெளிநாட்டில் பல லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளார்.
இந்நிலையில் நீலகண்டன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய அவரது மகன்கள் அவருக்கு சுமார் ரூ.20 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டினர் பின்னர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி விருந்து அளித்தனர். மேலும் சுமார் 1000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.
இதுகுறித்து அவரது மகன்கள் கூறுகையில்:-
எங்களுடைய தந்தை எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கினார். அப்பா செய்ததில் நாங்கள் சிறிது கூட அவருக்காக எதுவும் செய்யவில்லை. எங்களுடைய அப்பா அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என அவ்வபோது கூறி வருவார்.
அதன் காரணமாக அவருடைய நினைவு நாளில் தங்களால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றும் மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய பெற்றோர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.