மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
- அதிகாரிகளிடம் வாக்குவாதம்-பரபரப்பு
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்திலிருந்து அருகில் உள்ள நகராட்சி அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் சென்னை மற்றும் பெங்களூர் செல்ல தேசிய நெடுஞ்சாலை பஸ் நிலையம் என அனைத்துக்கும் சென்று வர நியூடவுன் ெரயில்வே கேட் கடந்து செல்வதை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ெரயில்வே கேட் அருகே இந்த சாலையின் ஓரம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பெரிய மரங்கள் உள்ளது. ெரயில்வே கேட்டை கடந்து செல்ல மேம்பாலமும் சுரங்க பாதையோ இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாததால் பள்ளி கல்லூரி செல்பவர்களும், ெரயில்வே கேட்டில் ெரயில் கடக்கும் நேரத்தில் இந்த பழமையான மரத்தின் கீழ் நிழலுக்காக பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.
பழமையான இந்த மரத்தின் கிளைகள் ரயில்வே தண்டவாளத்தின் மேல் உள்ள மின்சார கம்பியில் உரசாமல் இருக்க ரயில்வே அதிகாரிகளின் ஏற்பாட்டால் மரக்கிளை களை வெட்டுவதற்கு ஒப்பந்ததாரருக்கு விடப்பட்டுள்ளது.
ஆனால் மரக்கிளையை வெட்டும் ஒப்பந்ததாரர் அளவுக்கு அதிகமாக மரக்கிளைகளை வெட்டி வருதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் மரம் வெட்டும் ஒப்பந்ததாரர் மற்றும் ெரயில்வே அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்ப ந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மரங்களை அதிக அளவில் வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.