நவீன வசதிகளுடன் கப்பல் வடிவ கழிவறை
- அரசு பள்ளியில் கட்டப்பட்டுள்ளது
- பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், கொரட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 750 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த தலைமை ஆசிரியர் உள்பட 30 பேர் பணிபுரிகின்றனர்.
இங்குள்ள மாணவர்களின் அவசர தேவைக்காக கட்டப்பட்ட கழிவறை கட்டிடங்கள், கட்டி முடித்து பல வருடங்கள் ஆனதால் பழுதடைந்து காணப்பட்டது.
எனவே புதிய கழிவறை கட்டித்தர வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் மாணவிகளுக்கு நவீன வசதிகள் கொண்ட பிரத்தியேகமான கழிவறை கட்ட முன் வந்தது. அதன்படி ரூ.23 லட்சம் மதிப்பில் கப்பல் வடிவில் புதிய கழிப்பறை கட்டப்பட்டது.
மேலும் கழிவறை கதவுகளில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியமூட்டும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் நாப்கின், டிஸ்பென்சர்கள் மற்றும் எரிப்பான்கள் உள்ளடக்கிய 8 கழிவறை என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது. இந்த கப்பல் வடிவிலான கழிவறை நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அரசு பள்ளியில் நவீன வசதிகளுடன் கப்பல் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.