- பொருட்கள் எரிந்து நாசமானது
- 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் லியோ பிரான்ஸ் ( வயது 58). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார்.
அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் மர கடை மற்றும் மரப்பட்டறை குடோன் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மரக் குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, கடையில் இருந்த பொருட்கள், தீப்பிடித்து எறிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறை மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். சற்று நேரத்தில் கடையில் இருந்த பொருட்களுக்கும் தீ பரவியதால் அந்தப் பகுதியில் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.
தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் ஆம்பூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
மேலும் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தால் மர குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
சம்பவம் நடந்த இடத்தில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாசில்தார் மோகன், இன்ஸ்பெக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.