உள்ளூர் செய்திகள்

ஜாமீனில் வந்த வாலிபர் 12 ஆண்டுகள் தலைமறைவு

Published On 2023-10-26 08:16 GMT   |   Update On 2023-10-26 08:16 GMT
  • கர்நாடகாவில் போலீசார் கைது செய்தனர்
  • பெயர்- விலாசம் மாற்றம்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமலகண்ணன்(வயது 42). தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

மேலும் இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இதில் கமலக்கண்ணன் முன்விரோதம் காரணமாக

கடந்த 2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் 5-ந் தேதி வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள சக்தி நகரில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் நேதாஜி நகரை சேர்ந்த சுதாகர்(வயது 31), விஸ்வநாதன்(23) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த விஸ்வநாதன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினார்.

இவரைப் பிடிக்க கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வாணியம்பாடி கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை பிடிக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் விஸ்வநாதன் வசித்து வந்த நிலையில் மீண்டும் போலிஸ் தன்னை தேடுவதை அறிந்த அவர் கர்நாடகா மாநிலத்திற்கு தப்பி ஓடி விட்டார்.

பின்னர் கர்நாடகவில் பதுங்கியிருந்த விஸ்வநாதனை தனிப்படை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

விஸ்வநாதனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

ஜாமினில் வெளியே சென்றவர் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் தஞ்சம் அடைந்தார்.

அங்கு தன் பெயர், விலாசம் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை மாற்றி கொண்டு, வாய் பேசாத லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இவருக்கு 12 வயதில் மகன் உள்ளான். நாங்கள் திருப்பதி வருவதை அறிந்த விஸ்வநாதன், கர்நாடகாவுக்கு தப்பி சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்று கைது செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News