மூதாட்டி கொலையில் 4 பேரை பிடித்து விசாரணை
- 12 பவுன் நகை கொள்ளை
- 2 தனிப்படை தீவிரம்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குன்னத்தூர் அனுமன்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்பாவு மனைவி காந்தா (வயது 65). இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. இதில் முதல் மகன் சரவணகுமார் (46) மற்றும் இவருடைய மனைவி சுபா ஆகியோர் பக்கத்து கிராமமான காமராஜர் நகர் பகுதியில் உள்ள நிலத்தை பார்த்துக் கொள்ள சென்று விட்டனர்.
இந்த நிலையில் தனியாக காந்தா வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மர்ம நபர்கள் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பட்ட பகலில் வீட்டில் உள்ளே புகுந்து காந்தாவின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகை கொள்ளை அடிக்க முயன்றனர்.
அப்போது மூதாட்டி கூச்சல் போடவே மர்ம கும்பல் மூதாட்டியை தாக்கி கீழே தள்ளி சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை வைத்து கொலை செய்துவிட்டு மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயின் மற்றும் கையில் அணிந்து இருந்த 5 பவுன் வளையல் என மொத்தம் 12 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்ததும் சம்பவம் இடத்திற்கு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா திருப்பத்தூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகணேஷ் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து மூதாட்டி மகன் சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மர்ம நபர்களை பிடிக்க திருப்பத்தூர் டிஎஸ்பி கணேஷ் மற்றும் வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட போவதாகவும் மேலும் சந்தேகத்தின் பேரில் 4 பேரையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர் என முதற்கட்டமாக போலீசார் தெரிவித்துள்ளனர்.