உள்ளூர் செய்திகள் (District)

கற்றாழையை தென்னை மரங்களுக்கு உரமாக்கும் விவசாயி

Published On 2022-12-03 04:05 GMT   |   Update On 2022-12-03 04:05 GMT
  • எளிதில் பூச்சிகள் தாக்காத குணம் கொண்டதால் பராமரிப்பு மிகவும் குறைவாகக் கொண்ட பயிராகும்.
  • நல்ல லாபம் தரும் தொழிலாக கற்றாழை சாகுபடி இருக்கும்.

உடுமலை :

கடுமையான வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது கற்றாழை. குறைந்த அளவு நீரில் கரடு முரடான நிலத்திலும் வளர்ந்து பலன் தரக்கூடிய மூலிகைத்தாவரம் கற்றாழை ஆகும். எளிதில் பூச்சிகள் தாக்காத குணம் கொண்டதால் பராமரிப்பு மிகவும் குறைவாகக் கொண்ட பயிராகும்.

அழகு சாதனப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் பிடிக்கும் கற்றாழை சாகுபடியில் வேளாண் துறையினர் போதிய வழிகாட்டல் இருந்தால் நல்ல லாபம் தரும் தொழிலாக கற்றாழை சாகுபடி இருக்கும்.

இந்தநிலையில் உடுமலையையடுத்த போடிபட்டி பகுதியில் தென்னந்தோப்பில் கற்றாழை சாகுபடி செய்துள்ள விவசாயி ராமநாதன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிராக்டர் ஏர்க்கலப்பையில் சிக்கியநிலையில் கற்றாழை செடி ஓன்று தோட்டத்துக்கு வந்து சேர்ந்தது.

அதிலிருந்து கிளைவிட்ட நாற்றுகளை பிரித்து தோட்டத்தில் நடத்தொடங்கினேன். இவ்வாறு படிப்படியாக வளர்ந்து தோட்டம் முழுவதும் தற்பொழுது கற்றாழை வளரத்தொடங்கியுள்ளது. சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மருந்துக்காக கற்றாழையை வாங்கிச் செல்கிறார்கள். அவர்களிடம் பணம் எதுவும் வாங்குவதில்லை.

மேலும் தென்னை மரங்களைச் சுற்றி பாத்தி போல் பள்ளம் தோண்டி அதில் கற்றாழையை வெட்டி போடுகிறோம். இதனால் தென்னையில் வேர்ப்புழு உள்ளிட்ட நோய்களின் தாக்குதல் குறைவாக உள்ளது. தென்னை மரங்களுக்கு பூச்சி மருந்தாகவும் உரமாகவும் கற்றாழை பயன்படுகிறது.

மேலும் நன்கு வளர்ந்த கற்றாழைகளை 8 மாதங்களில் அறுவடை செய்யலாம். மேலும் வெட்டப்பட்ட கற்றாழை இதழ்களை ஒரு கிலோ ரூ. 10 முதல் ரூ .20 வரை விற்பனை செய்யலாம் எனவும், அதிலிருந்து ஜெல்லை பிரித்து விற்பனை செய்தால் கிலோ ரூ. 80 வரை விற்பனை செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரியவில்லை. மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் இருந்தால் கற்றாழை சாகுபடி நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாக மாறும் என்று கூறினார்.

Tags:    

Similar News