அமராவதி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்
- ராஜவாய்க்கால் பாசன நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
- கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக கடந்த 26ந் தேதி முதல் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு இன்று வரை வழங்கப்படுகிறது.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து கடந்த மே மாதம் பழைய ஆயக்கட்டு 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களில் உள்ள நிலைப்பயிர்களை காப்பாற்றுவதற்காகவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக கடந்த 26ந் தேதி முதல் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு இன்று வரை வழங்கப்படுகிறது.இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனம், அலங்கியம் முதல் கரூர் வரை, வலது கரை பகுதியிலுள்ள 10 வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள நிலையிலுள்ள பயிர்களுக்கு உயிர்த்தண்ணீர் மற்றும் வழியோர பகுதிகளின் குடிநீர்த்தேவையை கருத்தில் கொண்டு, கடந்த, 8ந் தேதி முதல் வரும், 17ந் தேதி வரை 10 நாட்களுக்கு 1,072 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அமராவதி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு, தண்ணீர் ஓடி வருகிறது.அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், அணை நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.