இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
- வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில்லை.
- கிராமம்தோறும் இ-சேவை மையம் இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் :
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஒவ்வொரு அரசுத்துறையும், கணினிமயமாகி வருகிறது. பொதுமக்களுக்கான அரசு சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. அதற்காக 2016 முதல் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும், கடைக்கோடியில் உள்ள வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு சேவை கிடைப்பதில்லை. அதற்காக தொலைதூரத்தில் இருக்கும் இ-சேவை மையம் சென்றுவருகின்றனர்.பொதுமக்கள் சிரமத்தை குறைக்கவும், அரசு சேவைகளை விரிவுபடுத்தவும், வருவாய் கிராமத்துக்கு ஒரு இ-சேவை மையம் செயல்பட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
மின்னாளுமை முகமை அலுவலர்கள் கூறுகையில், கிராமம்தோறும், இ-சேவை மையம் இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு முன்னுரிமை அளித்து உரிமம் வழங்கப்படுகிறது. புதிய உரிமம் பெற https://tnesevai.tn.gov.in, https://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.