உள்ளூர் செய்திகள்

தொடர் மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு

Published On 2022-12-09 07:18 GMT   |   Update On 2022-12-09 07:19 GMT
  • தொடர் மழையால் தென்னந்தோப்புகளில் நீர் தேங்கியுள்ளதால் தேங்காய் பறிப்பு பணிகளும் பாதித்துள்ளன.
  • வரத்து குறைவு காரணமாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை சற்று உயர்ந்துள்ளது.

குடிமங்கலம் : 

உடுமலை பகுதிகளில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் தேங்காய் நேரடி விற்பனைக்கும் தேங்காய்கள் உடைந்து கொப்பரை உற்பத்தி செய்து கொப்பரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் 300க்கும் மேற்பட்ட கொப்பரை களங்களில் நாள் ஒன்றுக்கு 100 டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு காங்கயத்திலுள்ள எண்ணை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.கடந்த ஒரு ஆண்டாக கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காததால் கொப்பரை உற்பத்தி குறைந்து கொப்பரை களங்கள் மூடப்பட்டு வருகின்றன.

தற்போது செயல்பட்டு வரும் குறைந்த அளவு கொப்பரை களங்களிலும் தொடர் மழை காரணமாக உற்பத்தி பெருமளவு பாதித்துள்ளது.தென்னந்தோப்புகளில் பிப்ரவரி முதல் ஆகஸ்டு வரை காய்வரத்து அதிகரிக்கும் சீசன் காலமாகும். இக்காலத்தில் ஏக்கருக்கு 1,400 தேங்காய் வரை வரத்து காணப்படும்.

தற்போது சீசன் குறைந்துள்ளதால் வரத்து பாதியாக குறைந்துள்ளது. மேலும் தொடர் மழையால் தென்னந்தோப்புகளில் நீர் தேங்கியுள்ளதால் தேங்காய் பறிப்பு பணிகளும் பாதித்துள்ளன.

தேங்காய் வரத்து குறைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொப்பரை களங்களில் 70 சதவீதம் வரை உற்பத்தி பாதித்துள்ளது.இதனால் கொப்பரை விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ கொப்பரை, 78 முதல் 79 வரை விற்று வந்தது 86 முதல் 90 ரூபாய் வரை விற்று வருகிறது.

அதே போல் வரத்து குறைவு காரணமாக தேங்காய் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு டன் பச்சை தேங்காய் 25 ஆயிரம் ரூபாயாகவும், கருப்பு காய், டன் 26 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மட்டை விலை 20 காசு என்ற அளவிலேயே உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- தென்னை காய்ப்பு சீசன் இல்லாததால் தேங்காய் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. தொடர் மழை காரணமாக தென்னந்தோப்புகளில் தேங்காய் பறிக்க முடிவதில்லை.கொப்பரை களங்களிலும் தேங்காய்கள் உடைப்பதில்லை. களத்திலுள்ள கொப்பரைகளிலும் பூஞ்சானம் தாக்குதல் பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் கொப்பரை உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.

வரத்து குறைவு காரணமாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை சற்று உயர்ந்துள்ளது. மகசூல் குறைவு காரணமாக விவசாயிகளுக்கு பயனில்லை. அடுத்து ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் மீண்டும் தேங்காய் மகசூல் சீசன் துவங்கும்.எனவே மத்திய, மாநில அரசுகள் கொப்பரைக்கு ஆதார விலையை உயர்த்தி அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை துவக்கி கட்டுப்பாடுகள் இல்லாமல் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News