பட்டுக்கூடுகளின் விலை உயர்வதால் புதிய பட்டுக்கூடுகளை வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
- பட்டுக்கூடு விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது
- தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உடுமலை :
கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சி த்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெண்பட்டுக்கூடுகள் விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகிறது.தினமும் ஏலம் வாயிலாக பட்டுக்கூடுகளின் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் நேற்று வரை 58 டன் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் திலகவதி கூறுகையில், கடந்த நிதியாண்டு 240 டன் பட்டுக்கூடு விற்பனை நடந்துள்ளது. இதன் வாயிலாக அரசுக்கு ரூ.19.85 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.நடப்பாண்டு துவக்கத்திலிருந்து நேற்று வரை 58 டன் பட்டுக்கூடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தினமும் 1-1.5 டன் பட்டுக்கூடுகள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பட்டுக்கூடுகளின் விலை உயர்வதால் புதியதாக பட்டுக்கூடுகளை வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.