தீபாவளி போனசை எதிர்பார்த்து காத்திருக்கும் பின்னலாடை தொழிலாளர்கள்
- தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது.
- நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழில் பிரதானமாக உள்ளது. பாத்திர உற்பத்தி, விசைத்தறி, கோழிப்பண்ணை, அரிசி உற்பத்தி, எண்ணெய் மில்கள், விவசாயம் உள்ளிட்ட தொழில்களும் அதிக அளவில் நடக்கிறது.
தீபாவளி என்றாலே திருப்பூர் பின்னலாடை தொழிலாளருக்கு போனஸ் கிடைக்கும் என்பது மகிழ்ச்சி. கடந்த காலங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் நாளிலேயே போனஸ் பட்டுவாடா துவங்கிவிடும்.
தற்போது பண்டிகைக்கு ஒருவாரம் முன்னதாக மட்டுமே போனஸ் வழங்கப்படுகிறது. தொழிற்சங்க கூட்டு கமிட்டி, தொழிலாளருக்கு விரைவான போனஸ் வழங்க வேண்டு மென தெருமுனை பிரசாரம் நடத்த துவங்கிவிட்டன.விலைவாசி உயர்வால், தொழிலாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருவதால் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உட்பட, தொழில் அமைப்புகளுக்கு, கூட்டுக்கமிட்டி, போனஸ் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.
ஒவ்வொரு தொழிலாளரும் ஜவுளி, பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், மொபைல்போன் என ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய போனஸ் கைக்கு வர வேண்டும் என காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் இருந்து போனஸ் பட்டுவாடாவை துவக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் நகரப்பகுதியில் இயங்கும், முன்னணி பர்னிச்சர் கடைகள், ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகள், மொபைல் போன் ேஷாரூம்கள், சரஸ்வதி பூஜைக்கு முன்னதாகவே, அதிரடி சலுகை அறிவிப்புகளுடன், தீபாவளி விற்பனையை தொடங்கி உள்ளன.