கலெக்டர் அலுவலகத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு - சி.சி.டி.வி., காட்சி பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை
- குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
- வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை. கடந்த சனிக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள வந்த அண்ணாதுரை தனது இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் பின்புறம் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.
மாலை பணி முடிந்து வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அதில் மதியம் 3மணியளவில் குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு அண்ணாதுரையின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது . இருசக்கர வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.
இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி., காட்சி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லேயே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.