திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர்-தூய்மைப்பணிக்கு புதிய திட்டங்கள்
- தினமும் ஏறத்தாழ 600 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
- 60 வார்டுகளிலும் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஏறத்தாழ 14 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். வீடுகள், கடைகள், பின்னலாடை தொழிற்சாலைகளில் இருந்து தினமும் ஏறத்தாழ 600 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30 வார்டில் தனியார் நிறுவனம் மற்றும் மீதமுள்ள வார்டுகளில் மாநகராட்சி துாய்மை பணியாளர் வாயிலாகவும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உள்ளாட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை தனியார் வெளிச்சந்தை முறையில் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், 60 வார்டுகளிலும் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி தினமும் 573.55 மெட்ரிக் டன் குப்பை அகற்ற டன்னுக்கு 3,860 ரூபாய் என்ற அடிப்படையில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக தினமும், 22.16 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 96 கோடி ரூபாய் தூய்மைப் பணிக்கு செலவிடப்படும். மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அதனை முறைப்படி கையாள வேண்டும்.
மாநகராட்சியை பொருத்தவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணி முழுமையாக தனியார் மயமாக்கப்படும் நிலையில் இந்த வாகனங்கள் அனைத்தும் வாடகை அடிப்படையில் அதே நிறுவனத்துக்கு வழங்கப்படும்.பேட்டரி வாகனங்கள், 80 இலகு ரக வாகனம், 7 கனரக வாகனம், 12 காம்பாக்டர் மற்றும் 1,099 குப்பை தொட்டிகளும் அந்நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதற்கான வாடகை தினமும் 95,285 ரூபாய் பில்லில் பிடித்தம் செய்யப்படும்.இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் 1.71 லட்சம் வீடுகளில் நேரடியாக பேட்டரி வாகனங்கள் மூலமும், 1.14 லட்சம் வீடுகளில் இலகு ரக வாகனம் மூலமும் குப்பைகளை தரம் பிரித்துப் பெற்று செயலாக்க மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுவர்.
இதுதவிர 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு வணிக நிறுவனங்கள், 9,500 பெரிய நிறுவனங்களில் கழிவு சேகரிப்பர். பிரதான ரோடுகள் 688 கி.மீ., மற்றும் 19 கி.மீ., தெருக்களிலும் தூய்மைப் படுத்தும் பணியில் அந்நிறுவனம் மேற்கொள்ளஉள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பகுதி வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை தினமும் வழங்கப்படுகிறது. இதுதவிர 2-வது மற்றும் 3-வது குடிநீர் திட்டம் மூலம் தற்போது குடிநீர் வினியோகம் நடக்கிறது.
தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கருத்து பரவலாக உள்ளது.
இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:- இரண்டாவது குடிநீர் திட்டத்தில் 2 கோடி லிட்டர், 3 வது குடிநீர் திட்டத்தில் 10 கோடி லிட்டர் என்ற அளவில் தற்போது குடிநீர் பெற்று வழங்கப்படுகிறது. தற்போது 4வது குடிநீர் திட்டத்தில் சோதனையோட்டத்தில் கடந்த வாரம் வரை 46 கோடி லிட்டர் பெற்று வழங்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் பெருமளவு சோதனையோட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அங்குள்ள 18 மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் நிரப்பி, திட்டம் செயல்படும் விதமாக குடிநீர் சப்ளை துவங்கப்பட்டு விட்டது. அவ்வகையில் தற்போது சராசரியாக தினமும், 5 கோடி லிட்டர் என்றளவில் குடிநீர் வினியோகமாகிறது.
அவ்வகையில் இதற்கு முன் சப்ளை செய்யப்பட்ட 2 மற்றும் 3வது குடிநீர் திட்டங்களின் குடிநீர் தெற்கு பகுதிக்கு வழங்கப்படும். இதுதவிர தெற்கு பகுதியில் கட்டி முடித்து தயார் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு அடுத்த கட்டமாக வெள்ளோட்டம் நடத்தி குடிநீர் வழங்கப்படும்.அனைத்து வார்டுகளிலும் பயன்பாட்டில் உள்ள ஆழ்குழாய் கிணறு மோட்டார்கள் பழுது நீக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலான கிணறுகள் அமைக்க கவுன்சிலர்களிடம் விவரம் பெறப்பட்டுள்ளது. விரைவில் அப்பணி மேற்கொள்ளப்படும்.குழாய் சேதம், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் உடனடியாக குடிநீர் வழங்கும் விதமாக 18 லாரிகள் பயன்பாட்டில் உள்ளன.மாநகராட்சி பகுதியில் குழாய் சேதம் போன்ற காரணங்களால் குடிநீர் வீணாவது மற்றும் வினியோகம் தடைப்படுவது போன்றவை தவிர்க்கும் வகையில் கண்காணிப்பு மேற்கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.