நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங்
- மன தைரியத்தை தர வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
- திருப்பூரில் 464 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூரில் நீட் தேர்வெழுதிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் மனநல ஆலோசனை வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறியதாவது:-
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி 'நீட்' ஒருங்கிணைப்பாளர்களுக்கும், பாட கருத்தாளர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தியுள்ளோம். அன்பான முறையில் வாழ்த்து சொல்லி, மனநிலையை அறிந்து உரிய ஆலோசனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு தேர்வு குறித்த அழுத்தம் தராமல் மன தைரியத்தை தர வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு குறித்த சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். மன அழுத்தத்திற்கு ஆளாகும் முன் அவர்களை பேணிக்காக்க வேண்டியது அவசியம்.திருப்பூரில் 464 பேர் தேர்வு எழுதியுள்ளனர். தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள இயலவில்லை எனில் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்க வேண்டும். மன அழுத்தத்தை போக்க தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.