விலை சரிவால் மக்காச்சோளத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்
- வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.
- மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.
மடத்துக்குளம்:
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் பருவ மழைகள் திருப்தியாக பெய்ததால் இறவை மற்றும் மானாவாரி பாசன நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.இப்பகுதிகளில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.இப்பகுதிகளில் விளையும் மக்காச்சோளத்தை கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.
நடப்பாண்டு உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஒரு குவிண்டால் 2,250 முதல் 2340 வரை விற்று வந்தது. மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் சிண்டிகேட் காரணமாக கடந்த 10 நாட்களாக தினமும் 10 ரூபாய், 20 ரூபாய் என குறைக்கப்பட்டு குவிண்டால் 1,150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
வெளி மாநில வரத்து வாய்ப்பில்லை. உள்ளூர் மக்காச்சோளம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டிய சூழலில் திடீர் விலை சரிவு காரணமாக விவசாயிகள் மக்காச்சோளம் அறுவடையை குறைத்து கொண்டதோடு அறுவடை செய்ய மக்காச்சோளத்தையும் விற்பனை செய்யாமல் விலையை எதிர்பார்த்து இருப்பு வைக்க துவங்கினர்.இதனால் விற்பனைக்கு மக்காச்சோளம் வரத்து குறைந்த நிலையில் மீண்டும் குவிண்டாலுக்கு, 20 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மக்காச்சோளம் அறுவடை துவங்கி இரண்டு மாதம் வரை நிலையான விலை காணப்பட்டது. இந்நிலையில் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக விலை குறைக்கப்பட்டது.மக்காச்சோளத்திற்கு விதை, உரம், மருந்து என 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ள நிலையில் அறுவடைக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.வழக்கமாக ஏக்கருக்கு 40 குவிண்டால் மகசூல் கிடைத்து வந்த நிலையில் தற்போது 20 முதல் 22 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் விலையை எதிர்பார்த்து விவசாயிகள் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகள் கூறுகையில், மக்காச்சோளம் விலை குறைவு காரணமாக, விற்பனைக்கு வரத்து குறைந்தது. இதனால் மீண்டும் விலை உயரத்துவங்கியுள்ளது என்றனர்.