உள்ளூர் செய்திகள்

திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டதை படத்தில் காணலாம்.

திருப்பூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம் - காப்பு கட்டி விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

Published On 2023-11-14 11:17 GMT   |   Update On 2023-11-14 11:17 GMT
  • திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
  • விழாவிற்கு அலகுமலை கோவில் திருப்பணிக்குழு தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை தாங்கினார்.

 திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

பொங்கலூர் அருகே உள்ள அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று காலை தொடங்கியது. இதில் ஆறுபடை வீடு, காரிய சித்தி ஆஞ்சநேயர் வளாகத்திலுள்ள ஷண்முகம் மஹாலில் கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மஞ்சள் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், அங்குரார்ப்பனம் சங்கல்பம் ஆகியன நடைபெற்றது. பின்னர் முருகனின் வேலுக்கு காப்பு கட்டியவுடன், குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கணம் அணிந்து சஷ்டி விரதத்தை தொடங்கினார்கள்.

விழாவிற்கு அலகுமலை கோவில் திருப்பணிக்குழு தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை தாங்கினார். சிவகிரி ஆதினம், உத்தண்டராஜகுரு சிவ சமயபண்டித குருசுவாமிகள் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார். வாவிபாளையம் ஞானபாரதி வெ.ஆனந்தகிருஷ்ணன் சொற்பொழிவு நடைபெற்றது.

தொடர்ந்து முதல்நாள் யாகசாலை பூஜைகள், மண்டபார்ச்சனை, தீபாராதனை, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை ஆகியனவும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலை வேலைகளில் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது. வருகிற 18-ந் தேதி காலையில் கந்த சஷ்டி விழாவும், மாலையில் சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணிக்கு மேல் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மங்கலம் அருகே உள்ள குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில்கந்த சஷ்டி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை 8:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வருகிற 18-ந்தேதி சஷ்டி அன்று சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் வைபவம் நடக்கிறது. 19-ந்தேதி காலை 10 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் குழந்தை வேலாயுதசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

தாராபுரம் புதுபோலீஸ் நிலையம் எதிரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா மற்றும் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. நேற்று காலை 7.30 மணிக்கு கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சளுடன் கங்கணம் கட்டி விரதத்தை தொடங்கினர். மாலை 4 மணிக்கு செண்பக சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஹோம பூஜைகளும் நடைபெற்றது. வருகிற 18-ந்தேதி கந்த சஷ்டியை முன்னிட்டு காலை 8 மணி முதல் சிறப்பு பூஜைகளும், மாலை 5 மணிக்கு சூரசம்ஹார விழாவும் நடைபெற உள்ளது. 19-ந்தேதி மாலை 6.30 மணிக்கு முருகபெருமானுக்கு வள்ளி-தெய்வானையுடன் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில் பாலமுருகன் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வரை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.

கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நேற்று மாலை சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியர் வெண்மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இங்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டப்பட்ட பின் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேப்போல் காலேஜ் ேராட்டில் உள்ள கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

அவினாசி அருகே சேவூர் அறம் வளர்ந்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தராய் அருள்பாலிக்கும் கல்யாண சுப்பிரமணிய சாமிக்கு, கந்தசஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 17 -ந்தேதி வரை தினசரி அலங்கார பூஜைகளும், மகாதீபாராதனையும் நடக்கிறது.18-ந் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. பல்லடம் அருகே உள்ள முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் நேற்று விநாயகர் வேள்வியுடன் கந்தசஷ்டி விழாதொடங்கியது. 18-ந்தேதி சூரசம்ஹார விழா நடக்கிறது.  

Tags:    

Similar News