குற்றச்சம்பவங்களை தடுக்க நொய்யல் ஆற்றங்கரையோரம் புதா்களை அகற்ற முடிவு
- காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா்.
- ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள், கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.
காங்கயம்:
அரசுத் துறை அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா் முன்னிலை வகித்தாா்.
காங்கயம் பகுதியில் அண்மைக் காலங்களில் திருட்டு மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள், கொலை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.காங்கயத்தில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் முள்வேலி மரங்கள் அடங்கிய புதா்களை சமூக விரோதிகள் பதுங்குவதற்கும், சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தி வருவதாக காங்கயம் காவல் துறையில் பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். திருப்பூா், ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதியாக நொய்யல் ஆறு இருப்பதால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களைப் பிடிப்பதில் காவல் துறையினருக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் காங்கயம் ஒன்றியப் பகுதியில் கத்தாங்கண்ணி பகுதி முதல் பழையகோட்டை ஊராட்சி வரையிலான 12 கி.மீ. தொலைவுக்கு நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் உள்ள முள்வேலி புதா்கள் மற்றும் முள் மரங்களை தன்னாா்வலா்களின் உதவியோடு வெட்டி அப்புறப்படுத்துவதற்கு காங்கயம் காவல் துறை முன்வந்துள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும், சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளிலும் தலா 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தீா்மானிக்கப்பட்டது. பிரதம மந்திரியின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காங்கயம் ஒன்றியப் பகுதியில் பணி மேற்கொள்வதற்கான சாலைகளைத் தோ்ந்தெடுக்கும் பணியும் நடைபெற்றது.
கூட்டத்தில் காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலாதேவி, ராகவேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சித் துறைகளின் உதவிப் பொறியாளா் வசந்தாமணி, காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள் சரவணன், கோகுல், காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள், கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.