உள்ளூர் செய்திகள்
விற்பனைக்கு வந்துள்ள மாடுகள். 

திருப்பூர் கண்ணபுரத்தில் களை கட்டும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாட்டுச்சந்தை - குடும்பமாக வந்து பார்த்து மகிழும் பொதுமக்கள்

Published On 2023-04-23 05:02 GMT   |   Update On 2023-04-23 05:02 GMT
  • வருகிற மே 4 ந் தேதியும்,5-ந்தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேரோட்டமும் நடைபெற உள்ளது.
  • மாட்டுச்சந்தையை காண பொது மக்கள் ,விவசாயிகள் பலரும் குடும்பமாக வந்து செல்கின்றனர்.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம்காங்கயம் அருகே திருச்சி-கோவை நெடுஞ்சாலையில் உள்ள கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமியை யொட்டி விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தேரோட்டம்,மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெறும்.இதில் பழமை வாய்ந்த மாரியம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 1000 ஆண்டுகள் பழமையான மாட்டுச்சந்தையும் நடைபெறுவது வழக்கம்.

களை கட்டும் மாட்டுச்சந்தை

இந்த ஆண்டு திருவிழா கடந்த 19-ந்தேதி( புதன்கிழமை ) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த புதன்கிழமை முதல் மாட்டுச்சந்தையும் கூடியது. இந்த மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதோடு, வாங்கியும் செல்கின்றனர். இந்த ஆண்டு கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா வருகிற மே 4 ந் தேதியும்,5-ந்தேதி மாலை விக்கிரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

10ம் நூற்றாண்டில் (1088) அபிமான சோழ ராசாத்திராசனால் விக்கிரம சோழீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு,வீர ராசேந்திர சோழனால் இக்கோவிலுக்கு கொடை வழங்கப்பட்டும், உழவர்கள், வணிகர்களுக்கு வரி விதிக்கப்பட்டு விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தைப்பூச விழாவும், தினப்பூஜைகளும், இதர திருவிழாவும் நடந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

மாடுகள் வரத்து அதிகரிப்பு

வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் உள்ள முருக கடவுள் ஆறுமுகங்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். மேலும் சேரர்களின் முசிறி (கேரளா) துறைமுகம் முதல் சோழர்களின் பூம்புகார் துறைமுகம் வரை செல்லும் இராசகேசரி பெருவழிப் பாதையில் அமைந்துள்ள இக்கோவிலும், இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தையும் 1000 ஆண்டுகள் பழமையானதாகும்.

கொரோனாவுக்கு பின் கடந்த ஆண்டு கூடிய சந்தையை காட்டிலும் இந்த ஆண்டு மாடுகள் வரத்து அதிகமாகியுள்ளது.மேலும் புதுக்கோட்டை ,திருவாரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாடுகள்வாங்க வந்துள்ளனர். இந்த மாட்டுச் சந்தைக்கு இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாட்டுச்சந்தையில் விவசாயிகள் நாட்டு மாடு, கன்று குட்டி, காளைகளை வாங்கிச் செல்கிறார்கள்.நாட்டு மாடுகளுக்கு என கடந்த 1000 ஆண்டுகளாக நடைபெறும் ஒரே சந்தை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்த்திக்கடன்

இந்த ஆண்டு மாட்டுச்சந்தையை காண பொது மக்கள் ,விவசாயிகள் பலரும் குடும்பமாக வந்து செல்கின்றனர். இங்கு 6 மாத இளங்கன்றுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு பசுமாடுகள் 50 ஆயிரம் முதல் 1.25 லட்சம் வரையும்,ஒரு சோடி காளைகள் 80 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரையும், இனவிருத்திக் காளைகள் 1 லட்சம் முதல் 1.60 லட்சம் வரையும் விற்பனைக்கு வந்துள்ளன.இச்சந்தையை ஒட்டி கோவிலின் முன்பாக மாடுகளுக்கான கயிறுகள்,மணிகள்,குஞ்சம்,சாட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு மாடு வாங்க வரும் விவசாயிகள் மாடுகள் வாங்க முடியாவிட்டாலும், சாட்டையை வாங்கி செல்வதும்,மாடு வாங்கும் விவசாயிகள் நேர்த்தி கடனாக மாரியம்மனுக்கு மொட்டை அடித்து கோவில் முன்பாக மாடுகளுக்கு பூஜைகள் செய்து கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News