திருப்பூர் தென்னம்பாளையம் உழவர்சந்தையில் நூதன முறையில் காய்கறிகளை திருடும் கும்பல் - தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா
- தக்காளி, கீரை உள்ளிட்ட ரகங்களை பறித்து கொண்டு வந்து விற்பனை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது.
- உழவர்சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் மிகவும் பிரபலமானது தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை. இங்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யும் வகையில் உழவர் சந்தை அமைக்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வருகிறது. இச்சந்தைக்கு பல்லடம், பொங்கலூர், கொடுவாய், கோவில்வழி, ஊத்துக்குளி, அவினாசி போன்ற ஊர்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் தக்காளி, கீரை உள்ளிட்ட ரகங்களை பறித்து கொண்டு வந்து விற்பனை செய்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதனால் திருப்பூர் மாநகர மக்களின் அன்றாட தேவையை இந்த உழவர் சந்தை பூர்த்தி செய்து வருகிறது.
மேலும் திருப்பூர் டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிறு மளிகை கடைக்காரர்கள் மற்றும் மொத்த காய்கறி கடைக்காரர்கள் தினமும் அதிகாலை 3 மணியில் இருந்து தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் உள்ள காய்கறிகளை கொள்முதல் செய்து வருவது வழக்கம். தற்போது திருப்பூர் பழைய பஸ் நிலையம் மேம்பாலம் இறக்கத்தில் இருந்து தென்னம்பாளையம் மார்க்கெட் வரை சாலையோர கடைகள் பெருகிவிட்டது. இதனால் அவசர அவசரமாக வரும் வியாபாரிகள் சாலையோர கடைகளில் காய்கறிகள் மற்றும் தக்காளி பழங்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் உழவர் சந்தையில் வியாபாரம் பாதிப்பதாக விவசாயிகள் மனக்குமுறலை வெளிப்படுத்தி, அதற்கான நடவடிக்கையிலும் இறங்கினர். அதாவது சாலையோரம் உள்ள கடைகளை மாநகராட்சி மூலம் அகற்றினர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் சாலையோர கடைகள் புற்றீசல் போல வரும். இப்படியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் உழவர் சந்தையில் தக்காளி வாங்குவதற்காக உள்ளே செல்லும் போது மோட்டார் சைக்கிளை பாதுகாப்பாக நிறுத்த முன் பக்க நுழைவு வாயிலில் கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப்படுகிறது. இதன்மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கு வசூல் செய்யும் கட்டண அதிகாரிகள் தான் ெபாறுப்பாகிறார்கள். அத்துடன் பார்க்கிங் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மீது ஒவ்வொரு முறையாக கொள்முதல் செய்யும் தக்காளிகளை கொண்டு வந்து வைத்து விட்டு பின்னர் திரும்ப வாங்க செல்வது வழக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தக்காளியை ஒரு பையில் வாங்கி வைத்து விட்டு செல்வார்கள்.
இந்தநிலையில் திருடுவதற்காக ஒரு கும்பல செயல்படுகிறது. காய்கறிகளை வைத்து விட்டு செல்வதை நோட்டமிடும் கும்பல்,அவர்கள் திரும்ப வருவதற்குள் காய்கறிகளை அலேக்காக பையுடன் தூக்கி செல்கிறார்கள். அதுமட்டும் இன்றி சாக்கு மூட்டையில் காய்கறி வாங்கி வைத்திருந்தாலும் அதற்கும் உத்தரவாதம் கிடையாது. இது அருகில் வண்டியை நிறுத்துபவர்களுக்கும் தெரிவது இல்லை. இதனால் திருடர்களுக்கு தக்காளி திருடுவது கைவந்த கலையாக அமைந்து விடுகிறது. மேலும் நுழைவு வாயிலில் கட்டணம் வசூல் செய்பவர்களுக்கும் இதுபற்றி தெரிவது இல்லை. கண்காணிப்பு கேமராவும் இல்லை. பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் இந்த உழவர் சந்தையில் பொருட்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும். இப்படி இருக்கும் சூழ்நிலையில் உழவர் சந்தைக்கு வெளியிலும் இதே சூழ்நிலை தான். கடந்த சில நாட்களுக்கு முன் உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வரும் விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிள் அதிகாலை 2.30 மணி அளவில் திருட்டு போனது. பின்னர் போலீசாரால் அது மடக்கி பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. ஆகவே உழவர்சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போலீசார் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.மேலும் மாநகராட்சி அதிகாரிகள் உழவர் சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு பொருட்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.