கோவில்களுக்கு சொந்தமான கடைகள், நிலங்களுக்கு வாடகையை உயர்த்த திட்டம்
- தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
- 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன.
பல்லடம் :
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களுக்கு சுமார் 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன. இவற்றில் குறைந்த வாடகை, மற்றும் வாடகை இல்லாமலே குத்தகைதாரர்கள் உள்ளனர். இந்துக்கோவில்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, கோவில்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் நிலங்கள், ஆகியவற்றின் வாடகை, குத்தகை தொகை போன்றவைகளை உயர்த்துவதற்கு இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்துக்கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில், அவற்றுக்கு நீண்ட காலமாக குறைந்த வாடகை, மற்றும் குறைந்த குத்தகை தொகை செலுத்தி வருகின்றனர். அவற்றை சரிபார்த்து, வாடகை மற்றும் குத்தகை தொகைகளை உயர்த்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாடகை மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை உயர்த்தி கோவில்களின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.