உடுமலை பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்
- பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்படுவதால் ரோடுகள் முற்றிலும் மறைக்கப்படுகிறது.
- 15க்கும் மேற்பட்ட பேனர்களை, நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் அகற்றினர்.
உடுமலை :
உடுமலை நகராட்சியில் பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தளி ரோடு, தாராபுரம் ரோடு சந்திப்பு பகுதிகளில், விதிமீறி ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதனால் ரோடுகள் முற்றிலும் மறைக்கப்படுகிறது.எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், கவனச்சிதறல் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள், காற்றுக்கு தாங்காமல் பொதுமக்கள், வாகனங்கள் மீது விழுந்தும் விபத்தை ஏற்படுத்தி வருகிறது.விதி மீறல் பேனர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நகராட்சி சார்பில் அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. பஸ் நிலையம், அனுஷம் ரோடு, பைபாஸ் மற்றும் கால்நடை மருத்துவமனையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட பேனர்களை, நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் அகற்றினர். நகராட்சி சார்பில், பஸ் நிலையத்தை சுற்றிலும் இருந்த பிளக்ஸ் பேனர்கள் மட்டும் அகற்றப்பட்டன.தளி ரோடு, தாராபுரம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, கொல்லன் பட்டறை, பழநி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், இன்னும் அதிக அளவு பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல், ஆபத்தான முறையில் உள்ளன. அவற்றையும் முழுமையாக அகற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.விதி மீறி கட்டடங்கள் மீதுள்ள விளம்பரத்தட்டிகளையும் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 30-ந் தேதிக்குள் பிளக்ஸ் பேனர்கள், ரோடுகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகள், ஆக்கிரமிப்புகள் என அனைத்தும் அகற்றப்படும் என்றனர்.