உள்ளூர் செய்திகள்

மேயர் தினேஷ்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்ற காட்சி. 

தொழிற்சாலை திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்ய திட்டம்

Published On 2023-04-22 11:48 GMT   |   Update On 2023-04-22 11:48 GMT
  • தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
  • தொழில்துறையினருக்கு உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சிபகுதியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், தொழில்துறையினர் கலந்துகொண்டனர்.தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. அந்த கழிவுகளை மறுசுழற்சி செய்து கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆராய பெங்களூருவை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1 மாத காலம் இந்த நிறுவனத்தினர் திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து எவ்வளவு திடக்கழிவு குப்பை வெளியேறுகிறது. அவற்றை மறுசுழற்சி செய்து கட்டுப்படுத்தும் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

இதற்கு தொழில்துறையினருக்கு உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. இந்த தொண்டு நிறுவனத்தினர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திடக்கழிவுகளை அகற்றும் வழிமுறைகளை தெரிவிக்க உள்ளனர். இந்த நிறுவனம் ஏற்கனவே கோவை மாநகராட்சியில் தொழிற்சாலை திடக்கழிவு மறுசுழற்சி பணிகளை செய்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தும்போது குப்பை பிரச்சினை வெகுவாக குறையும். வீதிகளில் குப்பை தேங்குவது தவிர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News