உடுமலை ஐ.டி.ஐ.யில் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
- 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
- புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உடுமலை :
உடுமலை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். கட்டட வசதி இல்லாத நிலையில் கொழுமம் ரோட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக தொழிற் பயிற்சி நிலையம் இயங்கி வந்தது.
இந்நிலையில் புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ. 5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு கலைக்கல்லூரி எதிரில் இடம் தேர்வு செய்யப்பட்டு வகுப்பறைகள், ஆய்வகம் ,தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டது. ஆனால் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் விஷமிகள் சிலர் மது அருந்தி பாட்டில்களை வீசி செல்கின்றனர். பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகி வருகிறது. எனவே மாணவர்களின் நலன் மற்றும் தொழில் பயிற்சி நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் எழுப்பவும் பாதுகாவலரை நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.