போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
- ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் திருப்பூர் சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர்
திருப்பூர் வடக்கு மாநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணப் பிரச்சாரம், பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.வடக்கு மாநகரின் கிழக்குப் பகுதியில் கருமாரம்பாளையத்தில் இருந்து ஒரு குழுவும், மேற்குப் பகுதியில் சாமுண்டிபுரம் எம்ஜிஆர் நகரில் இருந்து ஒரு குழுவும் புறப்பட்டு வடக்குப் பகுதியில் பல்வேறு மக்கள் குடியிருப்புகள் வழியாக 20 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் சென்று குமரானந்தபுரம் சிவன் தியேட்டர் சந்திப்பு அருகே சங்கமித்தனர். இதில் 60 இளைஞர்கள் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் திருப்பூர் சிறு, குறு, நடுத்தரத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பனியன் தொழிலுக்கு மூலப்பொருளாக உள்ள பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்.திருப்பூரில் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரின் வடக்குப் பகுதியில் ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உருவாக்க வேண்டும். நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்த குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்,
பயிற்சி பெற்ற ஊழியர்களை நியமித்து, அளிக்கப்படும் சிகிச்சை விபரத்தை அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் அனைத்து பேருந்து நிலையங்களையும் இணைக்கக்கூடிய வகையிலும், கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட பேருந்துகளையும் முழுமையாக இயக்க வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும், அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிட பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு பகுதியில் மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானங்கள் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.