உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 

'பைப்லைன் கியாஸ்' திட்டத்தை நடைமுறைப்படுத்தி திருப்பூர் தொழில்துறையினருக்கு மானிய விலையில் எரிவாயு வழங்க வேண்டும்

Published On 2022-11-24 07:07 GMT   |   Update On 2022-11-24 07:07 GMT
  • திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவுக்கு வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டும்.
  • நிட் காம்பாக்டிங் உரிமையாளர்கள் சங்கத்தின் 24வது மகாசபை கூட்டம் திருப்பூர் காந்திநகர் அரிமாசங்கத்தில் நடைபெற்றது.

திருப்பூர்:

'பைப்லைன் கேஸ்' திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தி திருப்பூர் தொழில் துறையினருக்கு மானிய விலையில் எரிவாயு வழங்க மத்திய,மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று காம்பாக்டிங் சங்க மகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

நிட் காம்பாக்டிங் உரிமையாளர்கள் சங்கத்தின் 24வது மகாசபை கூட்டம் திருப்பூர் காந்திநகர் அரிமாசங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தலைவர் சார்ஜா துரைசாமி தலைமை வகித்தார். பொருளாளர் முத்துசாமி வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். செயலாளர் ஈஸ்வர மூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். 

 கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:- 

யூகவணிகர்கள் சூதாட்ட முறையில் பஞ்சுவிலையை முறைகேடாக கையாள்வதை தடுக்க, மத்திய அரசு, பருத்தி ஆலோசனைக்குழு மற்றும் மத்திய பருத்திக்கழகங்கள் மூலம் கண்காணித்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும். இதனால் நூல் விலையை சீராக வைத்திருக்க முடியும். 

பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு பதிலாக ஆடையாக தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது, வேலைவாய்ப்பு, மதிப்பு கூட்டு, பொருளாதார ஏற்றம், அந்நிய செலாவணி என பலவகையிலும் பல்வேறு நன்மைகளும், வளர்ச்சியும் ஏற்படும் என்பதை மத்திய அரசு உணர்ந்து, அதற்கேற்றவகையில் தொழில் துறையினருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 

மெட்ரோ ரயில் மூலம் அருகில் உள்ள நகரப்பகுதிகளை இணைத்தல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல அடுக்கு மேம்பாலங்களை உருவாக்குதல், அடுக்கு மாடி குடியிருப்புகள் மூலம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தருதல் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பிற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு அதிக வருமானம் ஈட்டித்தருகின்ற திருப்பூர் போன்ற தொழில் நகரத்திற்கு போதிய அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாததை மத்திய, மாநில அரசுகள் கூர்ந்து கவனித்து, திருப்பூரின் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறோம்.  

தொழிலாளர்களின் அடிப்படைத்தேவையை கருத்தில் கொண்டு பாரதப்பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள 'இ.எஸ்.ஐ.,' மருத்துவமனை வசதியை துரிதமாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்த மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டும். திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவுக்கு வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டும். 

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 'பைப்லைன்'எரிவாயு திட்டத்தை நடைமுறைப்படுத்தி மானிய விலையில் எரிவாயு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, தற்போதுள்ள தொழில் நிலையை கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் பழைய நிலையை நீடித்து உதவ மாநில அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும், புதிய கட்டணங்களை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்வது என்றும், 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில் சிக்கல்களை கருத்தில் கொண்டு, வங்கிக்கடன் தள்ளுபடி சலுகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கி உதவிட வேண்டும் என்றும், 

 ஜி.எஸ்.டி.,வரிவிதிப்பில் பெரிய நிறுவனங்களுக்கும், சிறு, குறு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதால் தனி மனித வருமானம் உயர்வதில் சிக்கல் ஏற்படுவதை மத்திய அரசு உணர்ந்து, தொழில் நிறுவனங்களின் பொருளாதார தன்மையை உணர்ந்து போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புதிய பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட ஜுபிடர் குணசேகரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News