உள்ளூர் செய்திகள்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி 

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் தீவிரம் - அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்

Published On 2022-07-05 08:33 GMT   |   Update On 2022-07-05 08:33 GMT
  • வார்டுகளுக்கு கதவு, ஜன்னல் பொருத்தும் பணி, வயரிங் செய்து, தரைத்தளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
  • ஆகஸ்டு இறுதிக்குள் திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 850 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கலாம் என்றனர்.

திருப்பூர் :

திருப்பூரில் நடப்பாண்டு ஜனவரியில் மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டது. மருத்துவப்படிப்புக்கான 100 இடங்கள் திருப்பூருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது 98 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரண்டுக்குமான பணி ஒரே நேரத்தில் துவங்கினாலும் மாணவர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மருத்துவ கல்லூரி பணி முடிந்து விரைவாக திறக்கப்பட்டு விட்டது.

ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்டாலும் இந்தாண்டு மார்ச் மாதத்துக்கு பின்புதான் மருத்துவமனை பணி சுறுசுறுப்பாகியது. கடந்த மே மாதம் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் சட்டசபை நிதிக்குழுவினர் கட்டுமான பணிகளை பார்வையிட்டு சென்னைக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.இந்நிலையில் 6 தளங்களில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது வார்டுகளுக்கு கதவு, ஜன்னல் பொருத்தும் பணி, வயரிங் செய்து, தரைத்தளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வெளிவளாகத்தை சுற்றிலும் சுண்ணாம்பு பூச்சு பணி ஒரு வாரமாக நடந்து வருகிறது.

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் இருந்து மருத்துவமனைக்குள் வரும் வழித்தடம், மருத்துவமனை சுற்றி பாதுகாப்புச்சுவர், மைய கட்டடத்துக்கான 2 நுழைவு வாயில்களுக்கு இறுதி கருத்துரு தயாராகியுள்ளது. ஓரிரு நாளில் இப்பணிகளும் துவங்கவுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணி, 60 சதவீதம் நிறைவுற்ற நிலையில் நடப்பு மாத இறுதிக்குள் 90 சதவீத பணியை முடித்து விட ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு இறுதிக்குள் திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 850 படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கலாம் என்றனர்.

Tags:    

Similar News