உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை மாரியம்மன் கோவில் பழைய தேர் கண்காட்சியாக வைக்க திட்டம்

Published On 2022-10-23 08:27 GMT   |   Update On 2022-10-23 08:27 GMT
  • பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா கொண்டாடப்படும்.
  • திருவிழாவின் 15 வது நாளில் திருத்தேரில் அம்மன் எழுந்தருளி உலா வரும் தேரோட்டம், சிறப்பாக நடந்து வருகிறது.

உடுமலை :

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நோன்பு சாட்டப்பட்டு 15 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.

திருவிழாவின் 15 வது நாளில் திருத்தேரில் அம்மன் எழுந்தருளி உலா வரும் தேரோட்டம், சிறப்பாக நடந்து வருகிறது. பல லட்சம் மக்கள் பங்கேற்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

கோவில் அருகில் இருந்து தேரை பக்தர்கள் இழுத்து செல்ல, பின்னால் இருந்து யானை தள்ளி செல்லும் சிறப்பான நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.பல நூற்றாண்டு பழமையான மாரியம்மன் கோவில் தேர் மரத்தினால் செய்யப்பட்டு பின்னர் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டிருந்தது.தேர் பழமையானதாக உள்ளதால் அதற்கு பதிலாக புதியதாக ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் எண் கோண வடிவில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது.

பழைய தேரை விட சிறப்பு அம்சங்களுடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும் 5 நிலைகளை கொண்டதாகவும், தேரின் மொத்த உயரம் 12 அடியாகவும், இதில் தேர்பலகை 9 அடி உயரத்திலும், சுவாமிகள் எழுந்தருளும் உற்சவருக்கான சிம்மாசனம் இரண்டடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய தேருக்கு ஏறத்தாழ 780 கன அடி இலுப்ப மரமும், 20 கன அடி தேக்கு மரமும் பயன்படுத்தப்பட்டது. தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள் மற்றும் சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகன் சிற்பங்கள் என 220 மரச்சிற்பங்களும், வாழ்வியல் தத்துவம் விளக்கும் வகையில் 120 போதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.திருப்பூர் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய தேர் செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய தேரை மாரியம்மன் கோவில் தேர் நிலைக்கு கொண்டு வரவும், புதிய தேர் வெள்ளோட்டம் மேற்கொள்ளவும், கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதற்காக பல 100 ஆண்டுகள் சுவாமி எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் ஓடிய பழைய தேர், நிலையிலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொக்லைன் எந்திரம் உதவியுடன் இழுத்துச்செல்லபட்டு திருப்பூர் ரோட்டிலுள்ள கோவில் நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பழைய தேரை பழுதடையாமலும், அமைப்பும், அழகும் மாறாமல் முறையாக பராமரிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலை நகராட்சியில் தேரை கண்காட்சியாக வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News