காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பெண் விவசாயி தீக்குளிக்க முயற்சி-பரபரப்பு
- பிஏபி. பாசன கிளை வாய்க்காலின் மூலம் தண்ணீா் பெற்று விவசாயம் செய்து வருகிறாா்.
- காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளாா்.
காங்கயம் :
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட சிக்கரசம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தாமணி (வயது 55). இவருக்குச் சொந்தமாக 4 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. பிஏபி. பாசன கிளை வாய்க்காலின் மூலம் தண்ணீா் பெற்று விவசாயம் செய்து வருகிறாா்.
இந்நிலையில் வாய்க்காலில் இருந்து தண்ணீா் வரும் பாதையை பக்கத்து நிலத்துக்காரா் அடைத்து வைத்துவிட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சாந்தாமணி புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சாந்தாமணி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளாா். பின்னா் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, சாந்தாமணி திடீரெனெ வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா். அப்போது அங்கிருந்த துணை வட்டாட்சியா் மற்றும் போலீசார் அவரிடமிருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்தனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வட்டாட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து சாந்தாமணி மற்றும் அவரது குடும்பத்தினா் திரும்பிச் சென்றனா்.