அஞ்சல் அலுவலகங்களில் மகளிா் மேன்மை சேமிப்பு பத்திர திட்டம் தொடக்கம்
- இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000, அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
- ஜூன் 30ந் தேதி வரை இத்திட்டத்தில் இணைய அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
பெண்கள், குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யும் வகையில் மகளிா் மேன்மை சேமிப்பு பத்திர திட்டம் அஞ்சல் அலுவலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்லடம் அஞ்சல் துறை சாா்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மகிளா சம்மன் சேவிங் எனப்படும் மகளிா் மேன்மை சேமிப்புப் பத்திரத் திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பெயரில் சேமிப்புக் கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000, அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். காலாண்டுக்கு ஒரு முறை 7.5 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. சேமிப்புப் பணத்தில் 40 சதவீதத்தை ஓராண்டுக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் முதிா்வு காலம் இரண்டு ஆண்டுகள். கணக்குதாரா் அல்லது பாதுகாவலா் இறந்தாலும், கணக்குதாரா் கடும் நோய்வாய்ப்பட்டாலும் ஆவணங்களை சமா்ப்பித்து முன்முதிா்வு செய்ய முடியும். ஜூன் 30ந் தேதி வரை இத்திட்டத்தில் இணைய அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள திருப்பூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தையோ அல்லது அந்தந்த பகுதி கிளை அஞ்சல் அலுவலகங்களையோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.