திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம்
- 35 திருநங்கைகள், திருநம்பிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து முறையிட்டனர்.
- என்ஜினீயரிங் பட்டதாரியான திருநங்கை டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கு தயாராகுவதற்கு மனு கொடுத்தார்
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை, திருநம்பிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 35 திருநங்கைகள், திருநம்பிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து முறையிட்டனர்.
அவர்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுமனை, வீட்டு வசதி, கல்வி உதவித்தொகை, திறன் வளர்ப்பு பயிற்சி, சுயஉதவிக்குழு உறுப்பினராக சேர்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்காக காய்கறி கடை நடத்த ஏற்பாடு செய்யக்கோரி மனுக்கள் கொடுத்தனர். என்ஜினீயரிங் பட்டதாரியான திருநங்கை ஒருவர் அவர் டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கு தயாராகுவதற்கு தனக்கு தேவையான புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தார்.
அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அதிகாரி, சமூகநலத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.