திருவண்ணாமலை மகா தீப விழாவுக்கு 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
- பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்க ஏற்பாடு
- குற்றவாளிகளை முகத்தை வைத்து கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட உள்ளது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது:-
திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கூடுதலாக 19 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும். கிரிவலப் பாதையில் 15 மருத்துவ குழுக்கள், கோவில் வளாகத்தில் 3 குழுக்கள் அமைக்கப்படுகிறது.
மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.
தீபத் திருவிழாவிற்கு ஒரு ஐ.ஜி தலைமையில் 5 டி.ஐ.ஜி.கள், 20-க்கும் மேற்பட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் தலைமையில் 12 ஆயிரத்து 97 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட உள்ளனர்.
மேலும் ஆங்காங்கே 26 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. 600-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவில், மாடவீதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது மேலும் 7 ட்ரோன்கள் , 57 கோபுரங்கள் மூலமும் கண்காணிக்கப்படுகிறது.
மலையின் மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுவார்கள்.
திருவிழா கூட்டத்தில் சந்தேக நபர்களின் புகைப்படங்கள் எடுத்து அவர்கள் குற்றவாளிகளா? என்பதை முகத்தை வைத்து கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட உள்ளது.
கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிக்க நகருக்குள் நுழையும் போதே குழந்தைகள் கையில் முகவரியின் கூடிய தகவல் பட்டை கட்டப்படும். 101 இடங்களில் பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்படவுள்ளது.
12 பெரிய திரைகளில் கோவில் நிகழ்வுகள் திரையிடப்பட உள்ளது. சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட உள்ளனர்.
குடிநீர் வசதி, கழிவறை எங்கெல்லாம் உள்ளது என்பது குறித்து அனைத்து இடங்களிலும் தகவல் பலகை வைக்கப்பட உள்ளது.
மலையின் மீது ஏறக்கூடிய 23 வழிகளில் வனத்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கலெக்டர் அலுவலகம் உட்பட 4 இடங்களில் முக்கிய கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வகையில் இட வசதி மேற்கொள்ளப்பட உள்ளது. யாராவது வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
3 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். 158 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கள் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கப்படும். சுமார் 1,000 கல்லூரி மாணவர்கள் தன்னார்வலராக பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு சுமார் 130 தங்குமிடம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.