கார்கில் போர் 23-ம் ஆண்டு வெற்றிவிழா
- பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது
- முன்னாள் ராணுவவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை திருவூடல் தெருவில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்கம் சார்பில் கார்கில் போர் 23-ம் ஆண்டு வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மாவட்ட தலைவர் பி.கருணாநிதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட நீதிபதி (ஓய்வு) கிருபாநிதி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பிரிக்.ரவி முனுசாமி, கர்னல் சி.டி.அரசு, ருசிகேசவன், சுரேஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவையட்டி கார்கில் போரின் வெற்றிவிழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கு.கண்ணகி, அப்துல்கலாம் நல அறக்கட்டளை ஆர்.நடராஜன், சங்க மாவட்ட துணைத் தலைவர் எல்.அந்துராஜ், சிஎஸ்டி மேலாளர் சுப்பிரமணி உள்பட திருவண்ணாமலை, கண்ணமங்கலம், போளூர், செய்யாறு, கீழ்பென்னாத்தூர், செங்கம், வேட்டவலம், கலசபாக்கம், ஆரணி, வந்தவாசி, கேளூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் ராணுவவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் கார்கில் போரில் ஊனமுற்ற, வீரமரணமடைந்த முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முடிவில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.சகாதேவன் நன்றி கூறினார்.