உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் வீரர்கள் புதிய சாதனை

Published On 2023-05-01 06:54 GMT   |   Update On 2023-05-01 06:54 GMT
  • கலெக்டர் பதக்கங்களை வழங்கினார்
  • 40 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து 21-வது தேசிய அளவிலான இளையோர் தடகளப்போட்டியை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தியது. இந்த போட்டி கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

இதில் 28 மாநிலங்களில் இருந்து 950-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பகல், இரவாக நடைபெற இப்போட்டியில் 100 மீட்டர், 500 மீட்டர், 1500 மீட்டர் உள்ளிட்ட ஓட்ட பந்தையங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல் என்பன உள்ளிட்ட 40 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கி பேசினார்.

மாநில தடகள சங்க செயலாளர் லதா முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்கி பேசினார்.

விழாவில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி, அருணை கன்ஸ்ட்ரக்ஷன் வெங்கட், பிரியா விஜயரங்கன், சேஷாத்திரி உள்பட நடுவர்கள், வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் 4 பேர் புதிய சாதனை படைத்து உள்ளனர்.

ஆண்கள் பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் போட்டியில் உத்தரபிரதேஷத்தை சேர்ந்த ஷாருக்கான என்பவர் 9 நிமிடம் 5 விநாடியில் தடைகளை தாண்டியுள்ளார்.

அதேபோல் ஆண்கள் பிரிவில் கோல் ஊன்றி தாண்டுதல் போட்டியில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த தேவ்மீனா என்பவர் 5 மீட்டர் தாண்டினார்.

பெண்கள் பிரிவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த புஷர்கான்கவுரி என்பவர் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தை 9 நிமிடம் 35 விநாடியில் ஓடியும், மகராஷ்டிராவை சேர்ந்த அனுஷ்கா தாதர்கும்பா என்பவர் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 1 நிமிடத்தில் ஓடியும் புதிய சாதனையை படைத்து உள்ளனர்.

Tags:    

Similar News