தமிழகத்தில் தி.மு.க.வா, அ.தி.மு.க.வா என்ற நிலை மாறிவிட்டது
- உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
- திராவிட மாடல் பயிற்சி பாசறை முகாம் நடந்தது
கலசபாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட தென்பள்ளிப்பட்டு கலைஞர் திடலில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை முகாம் நடந்தது.
இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
திருவண்ணாமலைக்கு நான் சட்டமன்ற உறுப்பினரான பிறகு முதல் முறையாக தற்போது வந்துள்ளேன் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க இளைஞர் அணி முக்கிய காரணம் அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதி களையும் இணைத்து நடத்தப்படும் இந்த இளைஞர் அணி பாசறைக் கூட்டம் மாநாடு போல் காட்சியளிக்கிறது.
கடந்த ஜூன் மாதம் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் இந்த இளைஞர் பாசறை கூட்டத்தை தொடங்கி னோம். அதனைத் தொடர்ந்து 5 மாதங்களில் 210 தொகுதிகளில் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தியுள்ளோம்.
இந்த கூட்டமானது திமுகவின் வரலாற்றை இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த பாசறை கூட்டம் ஒவ்வொரு தொகுதிகளிலும் நடத்த வேண்டும் என்று நான் அனைத்து மாவட்ட செயலாளர்களை கேட்டுக் கொண்டேன்.
கூட்டம் சேர்ப்பது பெரிது அல்ல கொள்கையை கொண்டு போய் சேர்ப்பது தான் முக்கியம். அதனால் மீண்டும் தொகுதி வாரியாக மற்றும் ஒன்றியங்கள் வாரியாக இந்த இளைஞர் பாசறை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
அண்ணன் அமைச்சர் எ.வ.வேலு தலைவர் கருணாநிதியிடம் பயிற்சி பெற்றவர் எதிலும் வல்லவர் என்பதை செயல்படுத்தி காட்ட க்கூடிய திறமை மிக்கவர்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வர முடியவில்லை.
இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய உரிமை மற்றும் பல்வேறு திட்டங்களை அத்தனையும் பறிக்கப்படுகின்றன. தி.மு.க. எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது. இந்தி திணிப்பை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
உயர்கல்வியில் இந்தி ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும் என்ற மத்திய மந்திரி அமித்ஷாவை எதிர்த்து முதல் முதல் குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அதனை தொடர்ந்து தான் மற்ற மாநிலங்களில் எல்லாரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க.வினர் தமிழகத்தில் எப்படியாவது இந்தியை திணிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். திராவிட கழகம் இருக்கும் வரை தலைவர் மு.க. ஸ்டாலின் இருக்கும் வரை இந்தியை தமிழகத்தில் கொண்டு வரவே முடியாது.
பா.ஜ.க.வின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் எங்கள் தலைவர் மு.க ஸ்டாலின் அடிபணிய மாட்டார்.
தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் பிரதமர் திருக்குறளை பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் பேசுவார். ஆனால் தமிழகத்திற்கு எதுவும் செய்ய மாட்டார்.
முன்பெல்லாம் தி.மு.க.வா அ.தி.மு.க. வா என்று பேசிக் கொண்டிருந்த நிலை மாறி ஆரியமா திராவிடமா என்று பேசப்பட்டு வருகின்றன
அதிமுகவிற்கு என்று கொள்கை எதுவும் கிடையாது ஒரே கொள்கை தி.மு.க.வை எதிர்ப்பது தான். தற்போது வலிமையான தலைமை இல்லாத காரணத்தால் நான்காக பிரிந்து உள்ளன.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.